திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஐந்தாம் திருமுறை
5.17 திருவெண்ணி - திருக்குறுந்தொகை
முத்தி னைப்பவ ளத்தை முளைத்தவெந்
தொத்தி னைச்சுட ரைச்சுடர் போலொளிப்
பித்த னைக்கொலும் நஞ்சினை வானவர்
நித்த னைநெரு நற்கண்ட வெண்ணியே.
1
வெண்ணித் தொன்னகர் மேயவெண் டிங்களார்
கண்ணித் தொத்த சடையர் கபாலியார்
எண்ணித் தம்மை நினைந்திருந் தேனுக்கு
அண்ணித் திட்டமு தூறுமென் நாவுக்கே.
2
காற்றி னைக்கன லைக்கதிர் மாமணி
நீற்றி னைநினைப் பார்வினை நீக்கிடுங்
கூற்றி னையுதைத் திட்ட குணமுடை
வீற்றி னைநெரு நற்கண்ட வெண்ணியே.
3
நல்ல னைத்திகழ் நான்மறை யோதியைச்
சொல்ல னைச்சுட ரைச்சுடர் போலொளிர்
கல்ல னைக்கடி மாமதில் மூன்றெய்த
வில்ல னைநெரு நற்கண்ட வெண்ணியே.
4
சுடரைப் போலொளிர் சுண்ணவெண் ணீற்றனை
அடருஞ் சென்னியில் வைத்த அமுதினைப்
படருஞ் செஞ்சடைப் பான்மதி சூடியை
இடரை நீக்கியை யான்கண்ட வெண்ணியே.
5
பூத நாதனைப் பூம்புக லூரனைத்
தாதெ னத்தவ ழும்மதி சூடியை
நாத னைநல்ல நான்மறை யோதியை
வேத னைநெரு நற்கண்ட வெண்ணியே.
6
ஒருத்தி யையொரு பாகத் தடக்கியும்
பொருத்தி யபுனி தன்புரி புன்சடைக்
கருத்த னைக்கறைக் கண்டனைக் கண்ணுதல்
நிருத்த னைநெரு நற்கண்ட வெண்ணியே.
7
சடைய னைச்சரி கோவ ஆடைகொண்
டுடைய னையுணர் வார்வினை தீர்த்திடும்
படைய னைமழு வாளொடு பாய்தரும்
விடைய னைநெரு நற்கண்ட வெண்ணியே.
8
பொருப்ப னைப்புன லாளொடு புன்சடை
அருப்ப னையிளந் திங்களங் கண்ணியான்
பருப்ப தம்பர வித்தொழுந் தொண்டர்கள்
விருப்ப னைநெரு நற்கண்ட வெண்ணியே.
9
சூல வஞ்சனை வல்லவெஞ் சுந்தரன்
கோல மாவருள் செய்ததோர் கொள்கையான்
காலன் அஞ்ச வுதைத்திருள் கண்டமாம்
வேலை நஞ்சனைக் கண்டது வெண்ணியே.
10
இலையி னார்கொன்றை சூடிய ஈசனார்
மலையி னாலரக் கன்றிறல் வாட்டினார்
சிலையி னான்மதி லெய்தவன் வெண்ணியைத்
தலையி னாற்றொழு வார்வினை தாவுமே.
11
jpUr;rpw;wk;gyk;

Back - Kd;gf;fk;

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com